×

வாகைக்குளம் ஸ்காட் மையத்தில் தென்னை மரம் ஏறும் பயிற்சி

புதுக்கோட்டை, டிச. 29:  தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் செயல்படும் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மைய மற்றும்   வளர்ச்சி வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவியை பயன்படுத்தி மரம்  ஏறுவது குறித்து 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பெண்கள் உள்ளிட்ட தென்னை விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.
 வேலையில்லா கிராமப்புற இளைஞர்கள், பெண்கள்      இயந்திரம் மூலம் தென்னை மரங்களில் ஏறி வருவாய் ஈட்டவும், தென்னை மரம் ஏறுவதில் உள்ள ஆள் பற்றாக்குறையை குறைக்கும் வகையில்  தென்னை வளர்ச்சி வாரியம் ‘தென்னை மரங்களின் நண்பர்கள்’ என்ற திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்து வருகிறது.
 இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜாபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த தென்னை சாகுபடியாளர்கள் 20  பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கிராமம் பாரத பிரதமரின் விவசாயிகள் வருவாய் இருமடங்காக உயர்த்துதல் திட்டத்தின் கீழ் வேளாண் அறிவியல் மையம் மூலம் தத்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமம் ஆகும். இங்கு விவசாயம், தோட்டக்கலை, கால்நடை சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி, வேளாண் அறிவியல் மையத்தின் பல்துறை விஞ்ஞானிகளால் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தென்னை மர விவசாயிகளுக்கு நவீனகருவி மூலம் தென்னை மரம் ஏறுவது குறித்து 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.  
 இதில் தென்னை சாகுபடி முறைகள், நோய்  மற்றும் பூச்சிமேலாண்மை முறைகள் மற்றும் தென்னைமர கழிவு மறுசுழற்சி போன்றவற்றிற்கு வேளாண் அறிவியல் மைய தோட்டத்தில் செயல்விளக்கத்தோடு பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் இயந்திரத்தை கையாளும் முறை மற்றும் பராமரிப்பு  குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பெண்களும் ஆர்வத்துடன் தென்னை மரத்தில் ஏறி அசத்தினர்.
 பயிற்சியின் ஒரு பகுதியாக, விவசாயிகள் அனைவரும் கிள்ளிகுளத்தில் உள்ள மாநில தென்னை நாற்று பண்ணைக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தென்னை நாற்றங்கால் அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.
 நிறைவுநாளில் பயிற்சிபெற்றவர்களுக்கு தென்னை மரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இதில்  51.33 வினாடிகளில் தென்னை மரத்தில் ஏறி இறங்கி முதலிடம் பிடித்த ஜீவா என்ற பெண் முதல் பரிசை வென்றார். போட்டி மற்றும் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் நிறைவுவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தென்னை மரம் ஏறும் கருவி வழங்கப்பட்டது.

Tags : Wagaikulam Scott Center ,
× RELATED வாகைக்குளம் ஸ்காட் மையத்தில் தென்னை மரம் ஏறும் பயிற்சி